வகுப்பறையில் பிளஸ்-2 மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர்கள்:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர் ஒருவர் வகுப்பறைக்குள் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாதிக்கப்பட்ட மாணவர் உடனடியாக மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சம்பவம் நடந்த உடனேயே பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மாணவரை மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவலறிந்த போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் சம்பவம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.மாணவரின் தந்தை கூறுகையில், சுமார் 10 நாட்களுக்கு முன்பு பள்ளியில் தனது மகனுக்கும் சில மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
அதன்பிறகு சில நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்த மாணவர், மீண்டும் பள்ளிக்கு சென்ற முதல் நாட்களிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.இந்த தாக்குதல் முன்பிருந்த மாணவர் மோதலின் தொடர்ச்சியா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.