கோத்தகிரி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி; பொதுமக்கள் பீதியில்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கார்சாலை குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் கரடி ஒன்று சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளன.செடிகளுக்குள் இருந்து திடீரென வெளியே வந்த கரடியைக் கண்ட மக்கள் பதற்றமடைந்து உடனடியாக வீடுகளுக்குள் சென்று கதவுகளை பூட்டிக் கொண்டனர். சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தவர்களும் கரடியை பார்த்ததும் அவசரமாக வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர்.பின்னர் அந்த கரடி அருகிலிருந்த வனப்பகுதியை நோக்கி ஓடி மறைந்ததாக கூறப்படுகிறது.
கோத்தகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் அடிக்கடி நடமாடி வருவதாக கூறும் பொதுமக்கள், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.