Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

மழை வெள்ள முன்னெச்சரிக்கை: அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் என். ஆனந்த்

மழை வெள்ள முன்னெச்சரிக்கை: அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் என். ஆனந்த்
தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் மழைக்கால வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆறு மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காலை 9 மணியளவில் சென்னை மாவட்டம் ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து காலை 11 மணியளவில் சோழிங்கநல்லூர் வட்டத்தில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை இணையும் மேம்பாலம் அருகே உள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயிலும் தூர்வாரும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். சென்னையின் முக்கிய மூன்று ஆறுகளில் ஒன்றான அடையாறு ஆறு, ஆதனூர் ஏரியில் தோன்றி மொத்தம் 42.38 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து, பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 808 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஆற்றில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நீரும், செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரும், மழைநீரும் சேர்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் சுமார் 17.18 கிலோமீட்டர் தூரம் அடையாறு ஆற்றில் பாய்கிறது. அதன் பின்னர் ஆறு சுமார் 17 கிலோமீட்டர் சென்னை மாவட்டத்தில் பாய்ந்து கடலில் கலக்கிறது.பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லும் அடையாறு ஆற்றில் ஆகாயத்தாமரை, நீர்த்தாவரங்கள் மற்றும் மிதக்கும் கழிவுகள் அதிகளவில் தேங்கியிருப்பதால் நீரோட்டம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீர்வளத்துறையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ளும் தூர்வாரும் பணிகள், விமான நிலைய ஓடுபாதை கீழ் உள்ள நீரோட்டப்பாதை முதல் திரு.வி.க. பாலம் வரை மற்றும் அடையாறு முகத்துவாரப் பகுதிவரை நடைபெறவுள்ளன. இதன் மூலம் மணப்பாக்கம், நந்தம்பாக்கம், கோடம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளநீர் தடையின்றி செல்லும் சூழல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பழவேற்காடு ஏரியிலிருந்து மரக்காணம் உப்பங்கழி வரை அமைந்துள்ள பக்கிங்ஹாம் கால்வாய் 167 கிலோமீட்டர் நீளமுடையது.
Advertisement
இதன் அகலம் 20 முதல் 100 மீட்டர் வரை மாறுபடுகிறது. அடையாறு ஆற்றுப் பகுதியிலிருந்து முட்டுக்காடு முகத்துவாரம் வரை அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் சுமார் 23.5 கிலோமீட்டர் நீளம் கொண்டது. வெள்ளக் காலங்களில் ஒக்கியம் மடுவு வழியாக சுமார் 8,000 கனஅடி மழைநீர் வங்காள விரிகுடாவை அடைகிறது. சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில், பள்ளிக்கரணை மற்றும் ஒக்கியம் மடுவு பகுதிகளில் இருந்து நீரோட்டத்துடன் வரும் ஆகாயத்தாமரை, மிதக்கும் கழிவுகள் மற்றும் அப்பகுதியில் வளர்ந்துள்ள நீர்த்தாவரங்கள் அதிகமாக தேங்கியுள்ளதால், நீரோட்டமும் நீர் கடத்தும் திறனும் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மழைக்காலங்களில் நீர்த்தேக்கம், வெள்ள அபாயம், குடியிருப்புகளுக்கு பாதிப்பு, துர்நாற்றம், கொசு உற்பத்தி மற்றும் சுகாதாரச் சிக்கல்கள் ஏற்படும் நிலை உருவாகிறது.இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, நீர்வளத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலுடன், பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆகாயத்தாமரை, மிதக்கும் கழிவுகள் மற்றும் பிற தேவையற்ற பொருட்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் மழைநீர் தடையின்றி கடலுக்கு செல்லும் வகையில் கால்வாய் பராமரிக்கப்பட உள்ளது.வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச்சர் என். ஆனந்த் தூர்வாரும் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, அவற்றை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. பி. சரவணன், ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. எம். ஹரிஷ், தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆஃப்தாப் ரசூல், தலைமைப் பொறியாளர் எம். ஜானகி, நீர்வளத்துறை பொறியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு