மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜூலை 27-ல் விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பலர் காயமடைந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த வன்முறையைக் கண்டித்து, ஜூலை 27-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.தர்மேந்திர பிரதான் கல்வி மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு, நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளின் வினாத்தாள்கள் 152 முறை கசிந்ததாகவும், பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதால் சுமார் ஏழரை கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களால் சில மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும், இதற்கு பொறுப்பேற்க வேண்டிய மத்திய கல்வி மந்திரி எந்தச் சரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.கல்வித் துறையை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் தன்னிச்சையாக போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய ஜூலை 20-ஆம் தேதி, டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பேரணி அறிவித்திருந்ததாகவும், அதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தப் பேரணியைத் தடுக்க டெல்லி முழுவதும் அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதாகவும், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டதுடன் தடியடியும் நடத்தப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சீருடை அணியாத சிலர் மாணவர்களைத் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியதாகவும், அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை காயமடைந்த மாணவர்கள் தெரிவித்ததாகவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.சிவில் உடையில் மாணவர்களைத் தாக்கியவர்கள் யார் என்பது குறித்து டெல்லி காவல்துறை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும், காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிறிய காயமடைந்த மாணவர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை காவல்துறை இதுவரை வெளியிடவில்லை என்றும், அவர்களைச் சந்திக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதாகவும், மத்திய அரசு ஜனநாயக விரோத அணுகுமுறையை பின்பற்றுவதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.மாணவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளான மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும், பிரதமர் இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பவற்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்து, மருத்துவப் படிப்புக்கான சேர்க்கைத் தேர்வுகளை மாநில அரசுகளே நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலும், ஜூலை 27-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் ஜனநாயக சக்திகள் திரளாக பங்கேற்குமாறு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.