நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை; காசோலை மோசடி வழக்கில் சென்னை நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை:காசோலை மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.நடிகர் விமல் தயாரித்து நடித்த 'மன்னர் வகையறா' திரைப்படத்தின் தயாரிப்புக்காக கோபி என்பவரிடம் ரூ.4.5 கோடி கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. அந்தத் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட காசோலை, வங்கியில் போதுமான இருப்பு இல்லாததால் திரும்பியதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பலமுறை வாய்ப்பு இருந்தும் கடன் தொகை செலுத்தப்படாததால், கோபி காசோலை மோசடி வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.இந்த வழக்கின் விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்த்தி இன்று தீர்ப்பை வழங்கினார்.தீர்ப்பில், விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டு, அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தார். மேலும், மேல்முறையீடு செய்யும் வகையில் அவருக்கு அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.