சென்னை வானகரம்: ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; 4 பேர் கைது, மேலும் சிலருக்கு போலீஸ் வலை
சென்னை வானகரம் அருகே உள்ள துண்டலம் பகுதியில் ரவுடி ஒருவரின் வீட்டை குறிவைத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு கஞ்சா விற்பனை தொடர்பான முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.துண்டலம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (26) என்ற ராஜி, ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரின் பெயர் வானகரம் காவல் நிலைய சரித்திரப் பதிவேட்டிலும் இடம்பெற்றுள்ளது.நேற்று முன்தினம் அதிகாலை, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர், தீப்பற்றவைத்து தயாரிக்கப்பட்ட இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ்குமார் வீட்டின் முன்பகுதியில் தொடர்ந்து வீசிவிட்டு தப்பிச் சென்றனர். குண்டுகள் வெடித்ததில் வீட்டின் வாசல் பகுதியில் தீப்பற்றியது.வெடிச்சத்தம் கேட்டு வெளியே வந்த குடும்பத்தினர், தீயை உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற வானகரம் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்போ, காயமோ எதுவும் ஏற்படவில்லை.முதற்கட்ட விசாரணையில், ராஜ்குமார் மற்றும் மற்றொரு தரப்பினர் அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் இரு தரப்புக்கும் இடையே நீண்டநாளாக மோதல் இருந்து வந்ததாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த முன்விரோதத்தின் தொடர்ச்சியாக அச்சுறுத்தும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.இந்த வழக்கில் அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த ஜீவா (20), ராகுல் (21), கோகுல் (23) உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பரத் உள்ளிட்ட சிலரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.