சென்னை அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பிலான அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை மையம் திறப்பு
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிஅழுத்த பிராணவாயு (Hyperbaric Oxygen Therapy) சிகிச்சை மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.இந்த புதிய மையத்தை மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க.அருண் ராஜ் தொடங்கி வைத்தார்.சென்னை மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு ஒரே இடத்தில் முழுமையான, கட்டணமில்லா அதிஅழுத்த பிராணவாயு சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நீண்டகால ஆறாத புண்கள், நீரிழிவு பாதப் புண்கள் மற்றும் சிரை தொடர்பான புண்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை பெரிதும் பயனளிக்கும்.இந்த சிகிச்சை மையத்திற்கான நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சென்னை ரோட்டரி சங்கத்தின் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதியின் மூலம் ரூ.2 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளன.முன்னதாக இந்த வசதி இல்லாததால் நோயாளிகள் பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தனர்.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்காக சுமார் ரூ.1 லட்சம் வரை செலவாகும் நிலையில், தற்போது அரசு மருத்துவமனையில் இதே சிகிச்சையை பொதுமக்கள் இலவசமாக பெற முடியும்.இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஆர்.சுகந்தி ராஜகுமாரி, அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி, நிலைய மருத்துவ அலுவலர் தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.