கோத்தகிரி அருகே குட்டிகளை முதுகில் சுமந்தவாறு கரடி உலா -
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கன்னிகா தேவி காலனி பகுதியில் தாய்க் கரடி ஒன்று தனது இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்தபடி குடியிருப்பு பகுதி மற்றும் தேயிலைத் தோட்டம் அருகே உலா வந்தது.
இந்தக் காட்சியைப் பார்த்த தேயிலைத் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பொதுமக்கள் சத்தம் எழுப்பியதைத் தொடர்ந்து, கரடி சிறிது நேரம் தனது குட்டிகளுடன் அங்கிருந்தபின் மீண்டும் தேயிலைத் தோட்டப் பகுதிக்குள் சென்று மறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதியில் கரடிகள் அடிக்கடி நடமாடி வருவதால், மனிதர்–வனவிலங்கு மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதாக உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். எனவே, குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து உலா வரும் கரடிகளை பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் மாற்ற வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.