நீலகிரி: தொழிலாளியை கொன்ற புலியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட லாரஸ்டன் 4-ம் நெம்பர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (63). தொழிலாளியான இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மாயமானார்.இதையடுத்து, நேற்று முன்தினம் காலை வனத்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து பாலகிருஷ்ணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியின் எல்லையோரத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் புலி கடித்ததற்கான தடயங்கள் இருந்ததுடன், உடல் பாகங்களை புலி தின்றிருப்பதும் தெரியவந்தது.இதுதொடர்பாக போலீசார் மற்றும் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், ஊற்று நீரை தடுத்து குழாய் மூலம் வீட்டு பயன்பாட்டுக்காக தண்ணீர் கொண்டு வரும் பணியில் பாலகிருஷ்ணன் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த புலி அவரை தாக்கி கொன்றது தெரியவந்தது. மேலும், அவரது உடலை புலி நீண்ட தூரம் இழுத்துச் சென்று சில உடல் பாகங்களை தின்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவத்தையடுத்து, பாலகிருஷ்ணனை தாக்கி கொன்ற புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
புலி பிடிபடாவிட்டால் அப்பகுதியில் தொடர்ந்து ஆபத்து ஏற்படும் எனக்கூறி, போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.இதையடுத்து கூடலூர் வன அலுவலர் தேவராஜ் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் சீனிவாசன் தலைமையில் வனச்சரகர்கள் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். தொழிலாளியை தாக்கியதாக கருதப்படும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், சம்பவம் நடைபெற்ற பகுதியில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும், நவீன டிரோன் உதவியுடன் புலி அப்பகுதியில் பதுங்கியுள்ளதா என்பதையும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதேபோல், புலியின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் வனத்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தொழிலாளியை கொன்ற புலியை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதற்காக 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் தனியாக எங்கும் நடந்து செல்ல வேண்டாம் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.