மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று மாலை சென்ற முதல்-அமைச்சர் விஜய்க்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. த.வெ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்த, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சார்பில் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, மதியம் அவுட்போஸ்டில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகைக்கு சென்ற அவர், மதிய உணவை முடித்த பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் மாலை 4 மணியளவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டார். கோரிப்பாளையம், நெல்பேட்டை, கீழவாசல், விளக்குத்தூண், ஜடாமுனி கோவில் தெரு வழியாக சென்ற முதல்-அமைச்சர் விஜய், கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலை அடைந்தார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு, அவர் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அவரை அறங்காவலர் குழுத் தலைவரும், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி அம்மாள் வரவேற்றார். அண்மையில் கும்பாபிஷேகம் நிறைவடைந்த நிலையில், மீனாட்சி அம்மன் கோவில் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. கோவிலுக்கு சென்ற விஜய், பொற்றாமரைக் குளம், அம்மன் மற்றும் சுவாமி சன்னதி பிரகாரங்கள், புதிதாக புனரமைக்கப்பட்ட வீரவசந்தராயர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.