ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட யு.பி.ஐ. வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் வரை வணிகர் தள்ளுபடி கட்டணம் (MDR) விதிக்கும் புதிய நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டண முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய நடைமுறையின் சட்டப்பூர்வ அடிப்படை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர். இந்த வழக்கில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட நபர்-வணிகர் (P2M) யு.பி.ஐ.
Advertisement
பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத MDR கட்டணம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த MDR கட்டணம் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக வசூலிக்கப்படாது என்றும், வணிகர்களிடமிருந்தே பெறப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ரூ.2,000 வரையிலான வணிகப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து கட்டணமின்றி நடைபெறும். நபர்-நபர் (P2P) யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய MDR நடைமுறையின் சட்டப்பூர்வத் தன்மை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.