Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!
நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று 3-வது நாளாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோ.க. அருண்ராஜ், நீட் தேர்வுக்கு எதிரான அரசினர் தனித்தீர்மானத்தை முன்வைத்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில், நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு பாதகமாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். குறிப்பாக, தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை இந்தத் தேர்வு பாதிப்பதாக கூறினார்.மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் நீட் பயிற்சி மையங்கள் அதிகரிக்க இந்தத் தேர்வு முறை காரணமாகியுள்ளது என்றும், பள்ளிப் பாடங்களை கற்பதில் இருந்து மாணவர்களின் கவனம் விலகி, நீட் பயிற்சியில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.12 ஆண்டுகள் பள்ளிக் கல்வியில் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் அறிவை விட, ஒரே நாளில் நடைபெறும் நுழைவுத் தேர்வின் முடிவுகள் அவர்களின் உயர்கல்வி வாய்ப்பை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி, 2021-ம் ஆண்டு தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு எண் 43/2021-ஐ சட்டசபை ஒருமனதாக நிறைவேற்றியிருந்தது. ஆனால், அந்த சட்ட முன்வடிவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.தொடர்ச்சியாக வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடந்ததைத் தொடர்ந்து, நீட் இளநிலை 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Advertisement
இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் மிகுந்த துயரத்தை எதிர்கொண்டதுடன், இளம் மாணவர்களின் உயிரிழப்பும் ஏற்பட்டதாக தெரிவித்தார். இதன் காரணமாக நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு மீதான நம்பிக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தேர்வு முறையை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகளை கருத்தில் கொண்டு, நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யும் வகையில், 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2020-ம் ஆண்டு இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையச் சட்டம், 2020-ம் ஆண்டு ஹோமியோபதிக்கான தேசிய ஆணையச் சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய மத்திய சட்டங்களில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சட்டசபை ஒருமனதாக வலியுறுத்தியது.இதன் மூலம், மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இந்த தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதேவேளை, மற்ற கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன.இதையடுத்து தீர்மானம் சட்டசபையின் முடிவுக்கு விடப்பட்டது. தீர்மானத்தை எதிர்த்து யாரும் வாக்களிக்காததால், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு