நன்செய் இடையாறு சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா
நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாறில் உள்ள சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பரமத்தி வேலூர் தாலுகா, நன்செய் இடையாறில் காவிரி ஆற்றங்கரையை ஒட்டி சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி, விநாயகர், பாலமுருகன், பொன்னாச்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனர். கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 15-ந்தேதி காலை கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. காலை 6 மணிக்கு மேல் மங்கள இசையுடன் மகாலட்சுமி யாகம் நடைபெற்றது. இதையடுத்து காலை 8 மணிக்கு மேல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். மாலை 5 மணிக்கு மேல் முளைப்பாரி அழைத்தல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மேல் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து 16-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.