திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா நேற்று கருட கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று இரவு, பெரிய சேஷ வாகன சேவை சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு திருப்பதி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் என இரண்டு பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளன. இதில் ‘சாலகட்ல’ என்று அழைக்கப்படும் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று தொடங்கியது. மாலை 6.21 மணி முதல் 6.35 மணி வரை மீன லக்னத்தில் கருட கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி முன்னிலையில் வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்கினர். பக்தர்கள் ‘கோவிந்தா’ என பக்தி கோஷம் எழுப்ப, மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. இதையடுத்து பிரதான அர்ச்சகர்கள் மற்றும் கங்கணப்பட்டர் தங்கக் கொடிமரத்தில் கருடக் கொடியை ஏற்றினர். பிரம்மோற்சவ விழாவுக்கு முப்பத்து முக்கோடி தேவர்களையும், அஷ்டதிக் பாலகர்களையும் அழைக்கும் அடையாளமாக கருட கொடியேற்றம் நடைபெறுவதாக அர்ச்சகர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருமலை ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கு முன்பாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, பரிவார தேவதைகளான அனந்தர், கருடர், சக்கரத்தாழ்வார் மற்றும் சேனாதிபதி ஆகியோருடன் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளினார்.
Advertisement
கருடன் உருவம் சிவப்பு நிறத்தில் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக் கொடியும் உடன் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் நடைபெற்றது. விழாவின் முதல் நாள் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பெரிய சேஷ வாகன வீதியுலா நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வைகுண்டநாதர் அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நான்கு மாட வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த கேலரிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என முழக்கமிட்டு மலையப்ப சுவாமியை தரிசித்தனர். தேவஸ்தான வாரிய தலைவர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி, விஜிலன்ஸ் அதிகாரி முரளிகிருஷ்ணா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பெரிய சேஷ வாகன சேவையையொட்டி ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தெலுங்கானா, தமிழ்நாடு, அசாம், மகாராஷ்டிரா, மணிப்பூர், புதுச்சேரி மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்கினர். பாரம்பரிய இசை, நடனம் மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் குற்றாலக் குறவஞ்சி, அசாமின் பிஹு நடனம் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய ஒயிலாட்டம் ஆகியவை பக்தர்களின் கவனத்தை ஈர்த்தன.