விஜய் லண்டன் பயணம் இன்ப சுற்றுலாவா.. முதலீடுகள் ஈர்ப்பா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். லண்டனுக்கு சென்ற தமிழக வெற்றிக் கழக அரசு தொடர்புடைய அதிகாரிகளை அழைத்துச் செல்லாமல், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதாக கூறுவது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். தொழில்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை லண்டனுக்கு அழைத்துச் செல்லாதது ஏன் என்றும், விஜய் லண்டன் சென்றது முதலீடுகளை கொண்டு வருவதற்காகவா அல்லது இன்பச் சுற்றுலாவுக்காகவா என்றும் மக்கள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களுடன் லண்டனில் வைத்து ஒப்பந்தம் செய்வதன் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று அரசு கூறும் நிலையில், மின் பற்றாக்குறையை சமாளிக்க வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கப்படும் என அமைச்சர் தெரிவிப்பது முரண்பாடாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். மின்வெட்டு இல்லையென்றால் வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும், அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் நேரத்திலும் மின்வெட்டு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுக்கே உபரி மின்சாரம் வழங்கப்பட்டதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசிடம் மின் கொள்முதலில் உரிய திட்டமிடல் இல்லை என்றும் விமர்சித்தார். தவெக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். புதிய ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், முன்பு லஞ்சம் கேட்டுப் பெறப்பட்டதாகவும், தற்போது வலியுறுத்தி கேட்டு பெறப்படுவதாகவும் கூறினார். அரசு அலுவலகங்களில் நடைபெறும் சோதனைகளில் பணம் பறிமுதல் செய்யப்படுவது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தற்போதைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக அவர் குற்றம்சாட்டினார்.