நன்செய் இடையாறு சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

நன்செய் இடையாறு சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா

நன்செய் இடையாறு சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா

நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாறில் உள்ள சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பரமத்தி வேலூர் தாலுகா, நன்செய் இடையாறில் காவிரி ஆற்றங்கரையை ஒட்டி சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி, விநாயகர், பாலமுருகன், பொன்னாச்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனர். கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 15-ந்தேதி காலை கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. காலை 6 மணிக்கு மேல் மங்கள இசையுடன் மகாலட்சுமி யாகம் நடைபெற்றது. இதையடுத்து காலை 8 மணிக்கு மேல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். மாலை 5 மணிக்கு மேல் முளைப்பாரி அழைத்தல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மேல் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து 16-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் மூன்றாம் கால யாக பூஜையும், 6.30 மணிக்கு மேல் கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தன. இரவு 10.30 மணியளவில் அஷ்டபந்தனம் எனப்படும் மருந்து சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று 17-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு மேல் யாத்ரா தானம் மற்றும் கடம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் சங்கிலி கருப்பண்ணசாமி, பொன்னாச்சி அம்மன், விநாயகர், பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓதி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.