திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. தேங்காயைவிட இளநீர் மூலம் அதிக வருமானம் கிடைப்பதால், விவசாயிகள் பலரும் தற்போது இளநீர் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடும் வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருவதுடன், ஏராளமான தென்னை மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் விளைச்சல் மேலும் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேங்காயின் விலை தொடர்ந்து உயர்ந்து, விரைவில் புதிய உச்சத்தை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Advertisement
தற்போது ஏற்றுமதி செய்யப்படும் தேங்காயின் விலை ஒரு கிலோ ரூ.52 வரை உயர்ந்துள்ளது. ஒரு டன் தேங்காய் ரூ.52 ஆயிரம் வரை விற்பனையாகிறது. விரைவில் ஒரு கிலோ தேங்காய் ரூ.70 வரை விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், சில விவசாயிகள் பறித்த தேங்காய்களை உடனடியாக விற்பனை செய்யாமல், விளைநிலங்களிலேயே குவித்து வைத்து வருகின்றனர்.தேங்காய்களை இருப்பு வைப்பதற்கு பெரிய அளவில் கூடுதல் பராமரிப்பு தேவையில்லை என்றும், தனியாக செலவு செய்யாமல் தோப்பிலேயே குவித்து வைக்க முடியும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விலை மேலும் உயரும்போது விற்பனை செய்யும் நோக்கில், தற்போது தேங்காய்களை இருப்பு வைத்து வருவதாக அவர்கள் கூறினர்.