இடைத்தேர்தலில் ரூ.10,000 கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது - ஆதவ் அர்ஜுனா பேச்சு
மதுராந்தகத்தில் நடைபெற்ற தவெக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இடைத்தேர்தலில் திமுக ரூ.10,000 வரை பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், அமைச்சராக பேசுவதைவிட தவெக தொண்டராக பேசுவதையே மகிழ்ச்சியாகக் கருதுவதாக கூறினார். சட்டமன்றத்தில் தான் பேச முயன்றால் ‘புரோட்டோகால்’ உள்ளிட்ட காரணங்களை கூறி தன்னை பேசவிடாமல் தடுப்பதாகவும் அவர் விமர்சித்தார். 75 ஆண்டுகள் பழமையான கட்சி, ஆலமரம், முருங்கை மரம் என பல்வேறு பெருமைகளை கூறிக்கொண்டு சட்டமன்றத்துக்கு வந்தவர்கள், கூட்டத்தொடர் முடிவடையும் நேரத்தில் அவையில் இருப்பதில்லை என்றும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். குறிப்பாக, முதல்வர் பேசும்போது அவரை பேசச் சொல்லிவிட்டு, அவர் உரையைத் தொடங்கியதும் சிலர் வெளியேறுவதாகவும் கூறினார். இடைத்தேர்தலை குறிப்பிட்டு பேசிய அவர், திமுக டெபாசிட்டை இழக்கும் என்றும், கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் திமுக தரப்பில் பணம் வழங்கப்படலாம் என்றும் தெரிவித்தார். தீபாவளிக்கான ஆடைகள் வாங்குவதற்கான பணம் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்டு, மக்கள் தவெகவின் விசில் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், தவெக இடைத்தேர்தலில் வாக்குகளுக்கு பணம் வழங்காது என்றும், நீண்ட காலமாக இருந்து வரும் பணம் கொடுத்து வாக்கு பெறும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதே தங்களது நோக்கம் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மதுராந்தகத்தில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் இனி இருக்காது என்றும் அவர் கூறினார். தவெகவிடம் பணம் பெற்றுக்கொண்டு ஒருவர் ராஜினாமா செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியதாக குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் ஏன் வாபஸ் பெற்றார் என்றும் கேள்வி எழுப்பினார். அங்கு விசில் சின்னத்தில் வேட்பாளர் போட்டியிட்டிருந்தால் அவரும் தோல்வியடைந்திருப்பார் எனவும் அவர் தெரிவித்தார். மதுராந்தகத்தில் எடப்பாடி பழனிசாமி நான்கு நாட்கள் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறிய ஆதவ் அர்ஜுனா, அதற்கு பதிலாக அவர் ராஜினாமா செய்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடலாம் என்றும், அங்கு ஒரு கல்லூரி மாணவியை வேட்பாளராக நிறுத்தி அவரை தோற்கடிப்போம் என்றும் கூறினார். கடந்த தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் இரட்டை இலை சின்னத்துக்குக் கிடைத்தவை என்றும், தற்போது இரட்டை இலையும் விசில் சின்னமும் ஒன்றாகிவிட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறினார்.