தமிழகத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24-ந்தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன. தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன், இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்குக் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களின் விவசாயக் கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறைவாக விவசாயக் கடன் பெற்றவர்களுக்கு ரூ.75 ஆயிரமும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரமும் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு கடன்களை வசூலிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு விவசாயிகள் சங்கம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் விவசாயிகள் கடும் மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்க்கும் மாநில அரசுக்கு விவசாய சங்கங்கள் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை உடனடியாக முழுமையாகத் தள்ளுபடி செய்ய முதல்-அமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை ஒடுக்கி, அவர்களின் கோரிக்கைகளை நசுக்கும் வகையில் மாநில அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதனைக் கண்டித்து, வரும் 24-ந்தேதி சென்னையில் உள்ள தலைமைச் செயலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தும்போது, தமிழகத்தில் செயல்படும் அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களையும் அழைத்துப் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பிட்ட சில சங்கங்களை மட்டும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்றும், அனைத்து விவசாய சங்கத் தலைவர்களுடனும் மாநில அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பூ.விஸ்வநாதன் தெரிவித்தார்.