இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்டோர் நடித்து வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குனராக வலம் வரும் பா. ரஞ்சித், ‘அட்டகத்தி’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது பா. ரஞ்சித் ‘வேட்டுவம்’ திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார். கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். சோபிதா துலிபாலா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ், பகத் பாசில் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெறுகின்றனர்.
Advertisement
கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகும் இப்படம், அறிவியல் புனைவு அம்சங்களையும் கொண்டதாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘வேட்டுவம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில், ‘வேட்டுவம்’ படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் புதிய வீடியோ இன்று வெளியாகியுள்ளது. ‘வேர்ல்ட் ஆஃப் வேட்டுவம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ, படத்தின் உலகத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.