மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே, ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் நடுரோட்டில் விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சோலை அழகுபுரம் சப்பாணிகோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (50). ‘சப்பாணி சரவணன்’ என அழைக்கப்படும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் சிறை தண்டனையும் அனுபவித்து வந்துள்ளார். சரவணன் வழக்கமாக டீக்கடைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு அவர் சென்றுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய கும்பல் திடீரென சரவணனை நோக்கி வந்துள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற சரவணன், நடுரோட்டில் அலறியபடி ஓடியுள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று, காவல் நிலையத்திற்கு அருகிலேயே கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளது.
Advertisement
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தப்பியோடிய 5 பேரையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது. மேலும், சம்பவம் தொடர்பான தடயங்களை சேகரிக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் தொடங்கும் அதிகாலை நேரத்தில், காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருப்பது மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.