மதுராந்தகத்தில் நடைபெற்ற தவெக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இடைத்தேர்தலில் திமுக ரூ.10,000 வரை பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், அமைச்சராக பேசுவதைவிட தவெக தொண்டராக பேசுவதையே மகிழ்ச்சியாகக் கருதுவதாக கூறினார். சட்டமன்றத்தில் தான் பேச முயன்றால் ‘புரோட்டோகால்’ உள்ளிட்ட காரணங்களை கூறி தன்னை பேசவிடாமல் தடுப்பதாகவும் அவர் விமர்சித்தார். 75 ஆண்டுகள் பழமையான கட்சி, ஆலமரம், முருங்கை மரம் என பல்வேறு பெருமைகளை கூறிக்கொண்டு சட்டமன்றத்துக்கு வந்தவர்கள், கூட்டத்தொடர் முடிவடையும் நேரத்தில் அவையில் இருப்பதில்லை என்றும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். குறிப்பாக, முதல்வர் பேசும்போது அவரை பேசச் சொல்லிவிட்டு, அவர் உரையைத் தொடங்கியதும் சிலர் வெளியேறுவதாகவும் கூறினார். இடைத்தேர்தலை குறிப்பிட்டு பேசிய அவர், திமுக டெபாசிட்டை இழக்கும் என்றும், கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் திமுக தரப்பில் பணம் வழங்கப்படலாம் என்றும் தெரிவித்தார். தீபாவளிக்கான ஆடைகள் வாங்குவதற்கான பணம் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்டு, மக்கள் தவெகவின் விசில் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், தவெக இடைத்தேர்தலில் வாக்குகளுக்கு பணம் வழங்காது என்றும், நீண்ட காலமாக இருந்து வரும் பணம் கொடுத்து வாக்கு பெறும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதே தங்களது நோக்கம் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மதுராந்தகத்தில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் இனி இருக்காது என்றும் அவர் கூறினார். தவெகவிடம் பணம் பெற்றுக்கொண்டு ஒருவர் ராஜினாமா செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியதாக குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் ஏன் வாபஸ் பெற்றார் என்றும் கேள்வி எழுப்பினார். அங்கு விசில் சின்னத்தில் வேட்பாளர் போட்டியிட்டிருந்தால் அவரும் தோல்வியடைந்திருப்பார் எனவும் அவர் தெரிவித்தார். மதுராந்தகத்தில் எடப்பாடி பழனிசாமி நான்கு நாட்கள் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறிய ஆதவ் அர்ஜுனா, அதற்கு பதிலாக அவர் ராஜினாமா செய்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடலாம் என்றும், அங்கு ஒரு கல்லூரி மாணவியை வேட்பாளராக நிறுத்தி அவரை தோற்கடிப்போம் என்றும் கூறினார். கடந்த தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் இரட்டை இலை சின்னத்துக்குக் கிடைத்தவை என்றும், தற்போது இரட்டை இலையும் விசில் சின்னமும் ஒன்றாகிவிட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறினார். திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் வலிமை விஜய்க்கு மட்டுமே இருப்பதாகவும், தற்போதைய அதிமுக எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான கட்சியாக மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆத்மா விசில் சின்னத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சியினரையும் அவர் கேள்வி எழுப்பினார். கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறைகளில் ஊழல் நடைபெற்றதா என்றும், குடும்ப நிதி மற்றும் கட்சி நிதி பெறப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பிய அவர், திமுக ஊழல் செய்யவில்லை என்று கம்யூனிஸ்ட்கள் கூற முடியுமா எனவும் வினவினார். தவெக தலைவர் விரும்பியிருந்தால் அதிமுகவிடம் ஆதரவு பெற்று, 15 அமைச்சர்களுடன் முதல்வராகியிருக்க முடியும் என்றும் ஆதவ் அர்ஜுனா கூறினார். ஆனால், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய அவர், சமூகநீதியில் விஜய் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் அமைப்பது தொடர்பாக தற்போது ஆய்வு மட்டுமே நடைபெற்று வருவதாகவும், அங்கு சட்டமன்றம் அமைப்பது குறித்து முதல்வர் விஜய் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தை அரசியலாக்கி மீனவர்களை ஏமாற்றுவதாக அவர் குற்றம்சாட்டினார். தலைமைச் செயலகமா, மீனவர்களின் வாழ்வாதாரமா என்ற கேள்வி எழுந்தால், தலைமைச் செயலகத்தைவிட மீனவர்களின் பக்கமே தங்கள் தலைவர் இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசுவது வருத்தமளிப்பதாகவும் கூறினார். அதிமுக உடையக்கூடாது என்பதே எம்ஜிஆரின் விருப்பமாக இருந்ததாகவும், எடப்பாடி பழனிசாமி கட்சியைப் பல துண்டுகளாக உடைத்துவிட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார். மேலும், அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் ஆகியோரிடம் இரண்டு கோரிக்கைகள் இருப்பதாக கூறிய அவர், தவெகவின் ஐந்து கொள்கைத் தலைவர்களுடன் எம்ஜிஆரையும் கொள்கைத் தலைவராக இணைக்க வேண்டும் என்றும், தனக்கு இருவரும் தவெக துண்டு அணிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தவெக எப்படி வெற்றி பெற்றது என்பது குறித்து இன்னும் ஆய்வு செய்து கொண்டிருப்பதாக கூறிய ஆதவ் அர்ஜுனா, தீபாவளியையொட்டி திமுக ரூ.5,000 பணத்துடன் வரும் என்றும், இடைத்தேர்தலில் ரூ.10,000 வழங்கினாலும் திமுகவால் வெற்றி பெற முடியாது என்றும் தனது உரையில் தெரிவித்தார்.