பெரம்பலூரில் கோவில் தேர் இழுத்தபோது விபத்து: மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள நன்னை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யனார் கோவிலில் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி இன்று திருவிழா நடைபெற இருந்தது.இதையொட்டி, கோவிலில் இருந்த சுமார் 20 அடி உயரமுள்ள சகடையை அலங்கரித்து, சுவாமியை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பணிகள் நேற்று இரவு நடைபெற்றன. இந்தப் பணியில் நன்னை தெற்குத் தெருவைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் அண்ணாதுரை (42) மற்றும் விவசாயி பரமசிவம் (42) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.இரவு சுமார் 8.45 மணியளவில் இருவரும் தேரை கோவிலிலிருந்து சாலை வழியாக இழுத்துச் சென்றனர். அப்போது ஏரிக்கரை மேட்டுப் பகுதியில் சென்றபோது, மேலே இருந்த மின்கம்பியை அவர்கள் கவனிக்காததாகக் கூறப்படுகிறது. இதனால், தேரின் உச்சிப் பகுதி மின்கம்பியில் உரசியது.இந்த விபத்தில், தேரை இழுத்துச் சென்ற அண்ணாதுரை மற்றும் பரமசிவம் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்தச் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கோவில் நிர்வாகத்தினருக்கும் குன்னம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.