தரையிறங்கும் தருணத்தில் ஏற்பட்ட என்ஜின் கோளாறு: சென்னை வானில் சில நிமிடங்கள் சுற்றிய இண்டிகோ விமானம்
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட திடீர் எந்திரக் கோளாறு காரணமாக, அந்த விமானம் தரையிறங்க முடியாமல் சில நிமிடங்கள் வானில் சுற்றிக்கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்துகொண்டிருந்த இந்த விமானத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட 224 பேர் பயணம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 11.30 மணியளவில் விமானம் சென்னை விமான நிலையத்தை அடைந்தது.விமானம் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வந்தபோது, அதன் இடதுபுற எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், என்ஜினில் எண்ணெய் கசிவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், விமானத்தை உடனடியாக தரையிறக்குவது ஆபத்தாக இருக்கக்கூடும் என்பதை உணர்ந்த விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார்.இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் ஓடுபாதை பகுதியில் அவசரநிலையை அறிவித்தனர். தீயணைப்பு வாகனங்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அனைத்து அவசரகால ஏற்பாடுகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்படும் வரை விமானம் வானில் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருந்ததால், அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் நிறைவடைந்த பிறகு, விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது.