தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 15 நாட்களுக்கு விநாடிக்கு 6,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் கடந்த ஆகஸ்டு 25-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டின் நீர் தேவையை கருத்தில் கொண்டு கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர்பாக ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தார் உத்தரவிட்டார். தமிழ்நாடு தரப்பில் விநாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் கோரப்பட்டிருந்த நிலையில், விநாடிக்கு 9,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 11.66 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்து வந்தது. ஆனால், கர்நாடக அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு இல்லை எனக் கூறி, அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
Advertisement
தொடர்ந்து விநாடிக்கு 9,000 கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டால், கர்நாடகத்தில் குடிநீர் விநியோகத்தில் கடுமையான சிரமங்கள் ஏற்படக்கூடும் என அந்த அரசு தெரிவித்தது. இதனால், தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 6,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒழுங்காற்றுக் குழுவின் இந்த பரிந்துரை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் இன்று மதியம் 3 மணிக்கு முடிவு செய்ய உள்ளது.