Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 08 செப்டம்பர் 2026 | 23 ஆவணி பராபவ வருடம்

இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களை களமிறக்கி இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம். அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தவெக நாடகம் நடத்துகிறது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால் அதிமுகவை சேர்ந்தவர்களை தவெக சமாதானப்படுத்த முயற்சிக்கிறது. தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்த கட்சிகள் தற்போது எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், அதிமுகவினரிடம் அவர்கள் பேசி வருகின்றனர். இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவோம். தவெக ஆட்சியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினால் உரிய பதில் அளிப்பதில்லை. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து மானியக் கோரிக்கைகள் வரையிலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாறி மாறி பேசியதால் சட்டமன்றத்தின் முக்கியமான நேரம் வீணாகியுள்ளது. மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளிப்பதில்லை. எந்த கேள்வி எழுப்பினாலும் மூன்று அமைச்சர்களே பதில் அளிக்கின்றனர். 45 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவத்தை தற்போது விவாதிப்பதன் மூலம் சட்டமன்ற நேரம் வீணடிக்கப்படுகிறது. நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்து பேசுகின்றனர். நான் எழுப்பிய எந்த கேள்விக்கும் முதல்-அமைச்சர் பதில் அளிக்கவில்லை. ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மோசடி குறித்து நான் கேட்ட கேள்விக்கும் முதல்வரிடம் பதில் இல்லை. காவலர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நான் முன்வைத்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படவில்லை. தவெக ஆட்சி செயல்பாடற்ற ஆட்சியாகவே இருக்கிறது.

Advertisement
சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து தவெகவை ஆதரிக்கும் இடதுசாரி கட்சியே விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை உள்ளது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த இடதுசாரி கட்சிகளே குறைகூறும் அளவில்தான் அரசின் செயல்பாடு உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான காட்சிகள் செய்திகளில் வெளியாகின. ஊழலை ஒழிப்பதாக கூறுகின்றனர். ஆனால் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் ஊழல் அதிகரித்துள்ளது. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை பணத்தை பறிமுதல் செய்யும் அளவுக்கு ஊழல் அதிகரித்திருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை அனைத்து ஆட்சிக் காலங்களிலும் செயல்பட்டு வந்துள்ளது. ஆனால் தவெக ஆட்சியில் மட்டும் லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெறுவது போன்று ரீல்ஸ் வெளியிடுகின்றனர். முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள துறைக்கு மற்றொரு அமைச்சர் பதில் அளிக்கும் நிலை உள்ளது. இனிமேலாவது முதல்-அமைச்சர் தனது கட்டுப்பாட்டில் உள்ள துறையை முறையாக கண்காணித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். தவெக ஆட்சி அமைந்த பிறகு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளது. நெல் கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நெல்மணிகள் நனைந்து சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்யவில்லை. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் தொடர்ந்தால் தற்போது ரூ.10 லட்சம் கோடியாக உள்ள கடன் ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கும். ஏற்கனவே இவ்வளவு கடன் இருக்கும் நிலையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஏற்கனவே கடன் சுமை உள்ளபோது புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான வருவாய் எங்கிருந்து கிடைக்கும்? இந்தக் கடனை மீண்டும் யார் செலுத்துவது? இறுதியில் மக்களின் வரிப்பணம்தானே கடனை அடைக்க பயன்படுத்தப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு