வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பாடி பகுதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று ஆய்வு செய்தார். ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் நடைபெற்று வரும் இந்தப் பணிகளை, ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகர்களுடன் இணைந்து மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டார். கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில், கொரட்டூர் கிழக்கு அவென்யூவில் தொடங்கும் இந்த மழைநீர் வடிகால் திட்டம் மொத்தம் 2.50 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்படுகிறது. சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலை மற்றும் பாடி மேம்பாலம் வழியாகச் செல்லும் இந்த வடிகால், அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயை சென்றடையும் வகையில் அமைக்கப்படுகிறது.
Advertisement
மொத்தமுள்ள 2.50 கிலோமீட்டரில் 1.90 கிலோமீட்டர் நீளத்துக்கான பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 600 மீட்டர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பாடி மேம்பாலம் அருகே நடைபெற்று வரும் பணிகளையும் ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் நேரில் ஆய்வு செய்தார். பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மண்டல அலுவலர் எம்.பி.தணிகைவேலன், மேற்பார்வைப் பொறியாளர்கள் திருமுருகன், பிரபாகரன், ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.