இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், செப்டம்பர் 8 முதல் 10-ந்தேதி வரை 3 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கை சென்றுள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது இலங்கை தலைவர்களை சந்தித்து முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுதல், கைது செய்யப்படுதல், சிறையில் அடைக்கப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மீனவர்களின் படகுகள் உள்ளிட்ட தனிப்பட்ட உடைமைகள் பறிமுதல் செய்யப்படுவதை தடுக்கவும், ஏற்கனவே கைப்பற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.