கேரள மாநிலம் கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் கொச்சி விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் புறப்பட்டு சுமார் 50 நிமிடங்கள் கடந்த நிலையில், 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது அதன் முதல் என்ஜினில் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர். அந்த என்ஜினில் ஆயில் அளவும் அழுத்தமும் வேகமாகக் குறைந்து ஆபத்தான நிலையை எட்டியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானிகள் அபுதாபி செல்லும் பயணத்தை கைவிட்டு, விமானத்தை மீண்டும் கொச்சிக்கு கொண்டு வர முடிவு செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோளாறு ஏற்பட்ட முதல் என்ஜினின் இயக்கமும் நடுவானிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலை குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இதனைத் தொடர்ந்து கொச்சி விமான நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரே ஒரு என்ஜினின் உதவியுடன் இயக்கப்பட்ட போயிங் 737 ரக விமானம், கொச்சி விமான நிலையத்தில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. மேலும், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னர், பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.