மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்றுடன் பிறந்த பெண் குழந்தை ஒன்று, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான பாக்டீரியா தொற்று மற்றும் செப்சிஸ் பாதிப்பால் உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றது. கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அந்தக் குழந்தை முழுமையாக குணமடைந்து பெற்றோருடன் வீடு திரும்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றபோது, குழந்தையின் தாய்க்கு கொரோனா தொற்று இருந்தது. இதையடுத்து பிறந்த சில மணி நேரங்களிலேயே குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பொதுவாக புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் கொரோனா தொற்று மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவது அரிதாகும். ஆனால், இந்தக் குழந்தைக்கு கொரோனாவுடன் சேர்ந்து கடுமையான பாக்டீரியா தொற்றும் ஏற்பட்டது. இதனால் செப்சிஸ் எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலை உருவானது. இதன் தாக்கத்தால் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் செயலிழக்கும் அபாயமும் ஏற்பட்டது. பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் வழக்கமான பாக்டீரியா தொற்றுக்கும், கொரோனா தொற்றுடன் தொடர்புடைய மல்டிசிஸ்டம் இன்ப்ளமேட்டரி சிண்ட்ரோம் எனப்படும் பாதிப்புக்கும் இடையிலான வேறுபாட்டைக் கண்டறிவது மருத்துவர்களுக்கு சவாலாக இருந்தது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் சாந்தனு ரே தலைமையிலான மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினர். மேம்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் உதவியுடன் குழந்தையின் பாதிப்பை துல்லியமாகக் கண்டறிந்தனர். நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து செயற்கை சுவாச உதவி அளிக்கப்பட்டது.
Advertisement
கொரோனா மற்றும் செப்சிஸ் ஆகிய இரு பாதிப்புகளையும் கட்டுப்படுத்த நரம்பு வழியாக நோய் எதிர்ப்பு மருந்துகளும், குறிப்பிட்ட அளவில் ஸ்டெராய்டுகளும் வழங்கப்பட்டன. மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் குழந்தையை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் மூலம் குழந்தையின் உடலில் இருந்த தொற்றுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை, தற்போது முழுமையாக குணமடைந்து பெற்றோருடன் வீடு திரும்பியுள்ளது. கடுமையான கொரோனா தொற்றுடன் பிறவித் தொற்றும் ஏற்பட்டிருந்தாலும், பாதிப்பை விரைவாகக் கண்டறிந்து உரிய சிகிச்சையைத் தொடங்கினால் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு முக்கிய உதாரணமாக அமைந்துள்ளது. இதுகுறித்து குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சாந்தனு ரே கூறியதாவது: “செப்சிஸ் மற்றும் கொரோனா ஆகிய இரண்டும் உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் என்பதால், குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தோம். எம்.ஐ.எஸ்.-என் பாதிப்பில் இறப்பு விகிதம் 50 சதவீதமாக உள்ளது. குழந்தையின் உடல்நிலை வேகமாக மோசமடைந்ததால், நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக ஆன்டிபாடியாக செயல்படும் காமா குளோபுலின் என்ற ரத்தப் புரதத்தை குழந்தைக்கு செலுத்த முடிவு செய்தோம். இதன் பின்னர் ஐந்தாவது நாளில் குழந்தையின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும் முழுமையாக குணமடையும் வரை குழந்தையை தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருந்தோம்” என்று தெரிவித்தார்.