ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ இறுதி டிரெய்லர் வெளியீடு; ஹல்க்-ஸ்பைடர்மேன் மோதல் கவனம் ஈர்ப்பு
டாம் ஹாலண்ட், ‘ஸ்பைடர்மேன்: ஹோம் கம்மிங்’ திரைப்படத்தின் மூலம் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து வெளியான ‘ஸ்பைடர்மேன்: ஃபார் ப்ரம் ஹோம்’ மற்றும் ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ திரைப்படங்களும் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இந்த மூன்று படங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கியிருந்தார்.இந்தத் தொடரின் நான்காவது படமாக ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தை டெஸ்டின் டேனியல் இயக்கியுள்ளார்.டாம் ஹாலண்டுடன் ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன், சாடி சிங், லிசா காலோன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த திரைப்படம், ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில், ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் ஹல்க் மற்றும் ஸ்பைடர்மேன் இடையேயான அதிரடி மோதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அதிரடி மற்றும் உணர்ச்சிகரமான அம்சங்கள் நிறைந்த மார்வெல் திரைப்படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்தியுள்ளது.படக்குழு தனது பதிவில், “புதிய நாளுக்கான நேரம் வந்துவிட்டது. டிக்கெட்டுகளை இப்போதே முன்பதிவு செய்யுங்கள். ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ ஜூலை 31 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது” என்று தெரிவித்துள்ளது.