வேலைவாய்ப்புக்காக ஜப்பானை நோக்கி நகரும் தென்கொரிய இளைஞர்கள்!
தென்கொரியாவில் நிலவி வரும் வேலைவாய்ப்பின்மை காரணமாக, அந்நாட்டு இளைஞர்கள் அதிகளவில் ஜப்பானில் வேலை தேடி சென்று வருகின்றனர்.சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, தென்கொரிய இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற தொடக்கநிலை பணியிடங்கள் போதிய அளவில் இல்லாததால், பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடுகின்றனர்.இந்நிலையில், தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் ஜப்பான், தென்கொரிய பட்டதாரிகளை பணியில் அமர்த்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தென்கொரியாவின் சியோல் நகரில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.குறிப்பாக தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் சேவைத் துறைகளுக்குத் தேவையான பணியாளர்களை ஜப்பானிய நிறுவனங்கள் நேரடியாகத் தேர்வு செய்து வருகின்றன. மேலும், முன் பணி அனுபவம் இல்லாத புதிய பட்டதாரிகளுக்குக் கூட முழுமையான பயிற்சி வழங்கி வேலை வழங்க தயாராக இருப்பதால், ஜப்பானில் கிடைக்கும் இந்த வாய்ப்பு தென்கொரிய இளைஞர்களுக்கு முக்கியமான வேலைவாய்ப்பு பாதையாக உருவெடுத்துள்ளது.