அதிமுக போராட்டம்: பங்கேற்க முடியாது என எஸ்.பி.வேலுமணி தரப்பு கடிதம்
தமிழக சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்தன. இதனிடையே, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டதாக கூறப்படும் எஸ்.பி.வேலுமணி தரப்பு, தங்களுக்கு பழைய பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என இருமுறை கடிதம் அனுப்பியதாகவும், அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை பாலவாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இல்லத்தில், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு ஆலோசனை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்தது.இந்தப் போராட்டம் தொடர்பாக எஸ்.பி.வேலுமணி தரப்பில் கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், ஆனால் தங்களது சொந்த மாவட்டத்தைத் தவிர்த்து வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தங்களை புறக்கணிக்கும் நோக்கத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு தோன்றுவதாகவும், ஏற்கனவே வகித்து வந்த மாநில மற்றும் மாவட்டப் பொறுப்புகளை மீண்டும் வழங்குவது தொடர்பான உறுதி என்ன ஆனது என்றும் அந்தக் கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.முன்னதாக, ராமநாதபுரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு நத்தம் விஸ்வநாதனும், தேனியில் நடைபெறும் போராட்டத்துக்கு எஸ்.பி.வேலுமணியும் தலைமை வகிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், இருவரும் கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.