துருக்கியில் இருந்து ரகசியமாக வெளியேறிய விவகாரம்: டிரம்ப் விளக்கம்
கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈரான் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகளும் ராணுவத்தினரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி, அவர் பயணித்த ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து வெளியேறி, விமான நிலையத்தில் உணவு எடுத்துச் செல்லும் வாகனத்தின் மூலம் மற்றொரு விமானத்தில் ஏறியதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் முதலில் பயணித்த ஏர் போர்ஸ் ஒன் விமானம் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக போலியான இலக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரகசிய நடவடிக்கையை தற்போது டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரகசியப் பயணம் மேற்கொள்ளும் முடிவு முழுமையாக பாதுகாப்புத் துறையினரால் எடுக்கப்பட்டதாகவும், தனக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் எந்தவித பயத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.அமெரிக்க அதிபர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், ஈரானின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து டிரம்ப் மேற்கொண்ட இந்த ரகசியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.