2036-க்குள் 1.5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை இலக்காக நிர்ணயித்துள்ளோம்: அமைச்சர் கீர்த்தனா
சென்னையில் நடைபெற்ற 'வெற்றி தமிழ்நாடு 2026' முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்கள் மூலம் 1,06,998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசியபோது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார். இன்றைய மாநாட்டில் மட்டும் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், தினசரி சராசரியாக ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, மொத்தமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தவெக ஆட்சி பொறுப்பேற்ற முதல் 100 நாட்களிலேயே இந்த முதலீடுகள் கிடைத்திருப்பது முக்கியமான முன்னேற்றம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறிய அமைச்சர், 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 அமெரிக்க டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை முதல்-அமைச்சர் நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.
வேலைவாய்ப்பிற்காக மக்கள் தங்களின் சொந்த ஊர்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படக் கூடாது என்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான அனுமதிகள் 21 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.தமிழ்நாட்டில் திறமையான மனித வளம் அதிகமாக இருப்பதாகக் கூறிய அவர், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கான வளர்ச்சிப் பாதையை நிர்ணயிக்கும் என்றும், 'வெற்றி தமிழ்நாடு 2026' மாநாடு மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் கூறினார்.