தேனி–எருமேலி இடையே அகல ரெயில்பாதை: ஆய்வு பணிக்கு ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல்
திண்டுக்கல்–சபரிமலை அகல ரெயில்பாதை திட்டத்தில் முக்கிய முன்னேற்றமாக, தேனியில் இருந்து கேரள மாநிலம் எருமேலி வரை சுமார் 95 கிலோமீட்டர் தூரத்துக்கு ரெயில் பாதை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.திண்டுக்கல் வழியாக தேனியை இணைத்து சபரிமலைக்கு அகல ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்பது நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையாகும். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் தேனி வழியாக சபரிமலைக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றன.இதனால் திண்டுக்கல்–சபரிமலை இடையே ரெயில் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
திட்டத்தை ஒரே கட்டமாக செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், திண்டுக்கல்–லோயர்கேம்ப், லோயர்கேம்ப்–சபரிமலை என இரு கட்டங்களாக செயல்படுத்தலாம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், திட்டத்தின் முதற்கட்டமாக தேனி முதல் எருமேலி வரையிலான 95 கி.மீ. வழித்தடத்துக்கான பூர்வாங்க ஆய்வை மேற்கொள்ள ரெயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தேனி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.இந்த ஆய்வு, திட்டத்தின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கும் அடுத்தகட்ட திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கும் அடிப்படையாக அமையும். எனினும், ஆய்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது மட்டுமே ரெயில் பாதை கட்டுமானத்துக்கு இறுதி அனுமதி கிடைத்துவிட்டது என்று பொருளல்ல.