வக்கீல்கள் தகுதித்தேர்வு: நீண்ட பயணத்தை தவிர்க்க கூடுதல் மையங்கள் அமைக்க கோரிக்கை
சட்டப்படிப்பை நிறைவு செய்து பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் வக்கீலாக பணியாற்றுவதற்கான தகுதியைப் பெற, இந்திய பார் கவுன்சில் சார்பில் அகில இந்திய வக்கீல்கள் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் வக்கீலாக செயல்படுவதற்கான தகுதியைப் பெறுகின்றனர்.
இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு நவம்பர் 29-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அக்டோபர் 27-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய 3 நகரங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து இளம் வக்கீல்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
ஆனால், மூன்று நகரங்களில் மட்டும் தேர்வு மையங்கள் இருப்பதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தொலைதூர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், தேர்வு எழுதும் இளம் வக்கீல்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மதுரை, சேலம், நெல்லை, தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர்கள், இந்திய பார் கவுன்சிலிடம் முறையிட்டு, தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.