90 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்: டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா?
மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் தற்போது தண்ணீர் இன்றி காய்ந்து வருகின்றன.இதற்கிடையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணைக்கு விநாடிக்கு 13,538 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.நீர்வரத்தை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 86.83 அடியாக இருந்தது.தற்போதைய அளவில் நீர்வரத்து தொடர்ந்து நீடித்தால், அடுத்த சில நாட்களில் நீர்மட்டம் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகும் இதே நிலை தொடர்ந்தால், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உருவாகலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.