பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவது தமிழக வளர்ச்சிக்கு பின்னடைவு - மு.க. ஸ்டாலின்
பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தை கைவிடும் முடிவு தமிழ்நாட்டின் வளர்ச்சியை பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக முதல்-அமைச்சர் அறிவித்திருப்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தின் நலனை பாதிக்கும் முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும், முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டு, சட்டமன்றத்தில் விவாதிக்கவோ கருத்துகளை தெரிவிக்கவோ வாய்ப்பு வழங்காதது சரியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னிலையில் இருக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம் அமைவது அவசியம் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். அந்த வாய்ப்பை நிராகரிப்பது மாற்றம் அல்ல; மிகுந்த ஏமாற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சாத்தியமான பல்வேறு மாற்று இடங்களை ஆய்வு செய்த பிறகே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு கட்டப் பணிகள் மற்றும் ஒப்புதல்கள் நிறைவடைந்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானப் பணிகளை விரைவாக தொடங்குவதற்கான திட்டங்கள் தங்களிடம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.தற்போதைய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து, அங்கு பணிகளை தொடங்குவதற்கு முன் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியே பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.முதலீட்டாளர்களின் முக்கிய தேர்வாக இருந்த தமிழ்நாடு, இதனால் போட்டி மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு டிரில்லியன், ஒன்றரை டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குகளை அடைய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.எந்தவிதமான ஆலோசனையும் மேற்கொள்ளாமல் த.வெ.க. அரசு எடுத்துள்ள இந்த முடிவு தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தனது பதிவில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.