2031-ல் தமிழக அரசியலில் தவெக மிகப்பெரிய சக்தியாக இருக்கும் - கவுண்டம்பாளையம் கனிமொழி
கோவை கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் மக்கள் பணி மற்றும் சாதனை விளக்க நிகழ்ச்சியில், அக்கட்சியின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கலந்து கொண்டு பேசினார்.அப்போது, கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் முதல் திமுக தரப்பைச் சேர்ந்ததாக தாம் குறிப்பிடும் ‘கரூர் கம்பெனி’யிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான பேக்கேஜ் தமக்கு வந்ததாக அவர் குற்றம்சாட்டினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என ஜோதிட அடிப்படையில் யூடியூப் சேனலில் பேச வேண்டும் என தம்மிடம் கூறப்பட்டதாகவும் தெரிவித்தார்.அந்த நேரத்தில் தான் தவெகவில் இணையவில்லை என்றும், கட்சித் தலைவர் தரப்பிலிருந்தும் தமக்கு அழைப்பு வரவில்லை என்றும் கூறிய கனிமொழி, அப்போதே திமுக ஆட்சிக்கு வராது என தெளிவாக தெரிவித்ததாக குறிப்பிட்டார். இருப்பினும், திமுக வெற்றி பெறும் என்று கூறுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த விவகாரத்தை தற்போது வெளிப்படையாக தெரிவிப்பதன் நோக்கம், மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என கனிமொழி கூறினார். பணம் கொடுத்து ஜோதிடம் அல்லது கணிப்புகள் மூலம் அரசியல் வெற்றியை உருவாக்க முடியாது என்றும், மக்களின் தீர்ப்பே இறுதியானது என்றும் அவர் தெரிவித்தார்.சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும் விஷயங்களுக்கு பதில் அளிக்காமல் அமைதியாக இருக்க வேண்டும் என தனக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், மக்கள் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்காகவே சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்றும், மக்களின் குரலை ஒலிப்பதில் சமரசம் செய்யப் போவதில்லை என்றும் கனிமொழி தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் தன்னை விமர்சிப்பவர்கள் நேரில் வந்து பேசலாம் என கூறிய அவர், தன்னை ‘அழகான பொம்மை’ என சிலர் விமர்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
தேவைப்பட்டால் அந்த ‘அழகான பொம்மை’ ஆபத்தானதாகவும் மாறும் என அவர் தெரிவித்தார்.தாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பதில் அளிக்க வேண்டிய காலம் வரும் என்றும், மக்கள் அனைத்தையும் கவனித்து வருவதாகவும் கனிமொழி கூறினார். அடுத்தடுத்த தேர்தல்களில் தவெக தனது பலத்தை நிரூபிக்கும் என்றும், 2031-ம் ஆண்டில் தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது என்றும், குடும்பத்தில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளைப் போல கட்சியினரிடமும் கருத்து மோதல்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறினார். ஆனால், வெளியில் இருந்து யாரும் கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.சட்டமன்றத்தில் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு உறுப்பினரும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து வருவதால் சபாநாயகருக்கும் பணிச்சுமை அதிகரிப்பதாகவும் கனிமொழி தெரிவித்தார்.வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தவெக போட்டியிடும் இடங்களில் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும், போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் வகையில் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.மக்களுக்காக குரல் கொடுக்கவும், அவர்களுக்காக தொடர்ந்து நிற்கவும் எப்போதும் தயாராக இருப்பதாக கூறிய கனிமொழி, அரசியலில் பணம், தவறான பிரசாரம் மற்றும் போலியான கணிப்புகளை விட மக்களின் நம்பிக்கையும் தீர்ப்புமே முக்கியம் என தெரிவித்தார்.