சென்னையில் தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் சாலை மறியல்; 250 பேர் கைது
சென்னை பாரிமுனை பகுதியில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக முந்தைய தி.மு.க. ஆட்சியின்போதும் அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என தூய்மைப்பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தங்களது வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக சென்னையில் போராட்டம் நடத்தி வரும் அவர்கள், அதன் தொடர்ச்சியாக இன்று பாரிமுனை என்.எஸ்.சி.
போஸ் சாலையில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் அங்கிருந்து பேரணியாக செல்ல முயன்றனர்.அப்போது, போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அதிருப்தியடைந்த தூய்மைப்பணியாளர்கள், போலீசாரை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி சாலையில் படுத்தும் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தூய்மைப்பணியாளர்கள் தெரிவித்தனர்.