மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோவில்: பல்லவர் கால சிறப்புமிக்க சிவத்தலம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றாக மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில் விளங்குகிறது. பல்லவர் ஆட்சிக் காலத்தில், குறிப்பாக 7-ம் நூற்றாண்டில் மாமல்லபுரம் முக்கிய துறைமுக நகரமாகத் திகழ்ந்தது. அப்போது பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மனின் அரசவையில் முக்கிய இடம் வகித்த பரஞ்சோதி என்பவர் இந்த கோவிலை கட்டி, வழிபாடுகள் நடைபெற ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
கருங்கற்களால் உருவாக்கப்பட்டு கிழக்கு நோக்கி அமைந்துள்ள மூன்று நிலை ராஜகோபுரம், கோவிலின் தனிச்சிறப்பாக காட்சியளிக்கிறது. கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் கொடிமரம் மற்றும் நந்தி பகவானை தரிசிக்கலாம். ராஜகோபுரத்தின் அருகே கோவில் வளாகத்தில் இருபுறங்களிலும் சூரியன் மற்றும் சந்திரனுக்கான தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.கிழக்கு நோக்கிய கருவறையில் மல்லிகேஸ்வரர் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இந்த சிவலிங்கம் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது. தெற்கு திசையை நோக்கி அமைந்துள்ள தனி சன்னிதியில் மல்லிகேஸ்வரி அம்பாள் நின்ற திருக்கோலத்தில், நான்கு கரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.கோவில் வளாகத்தில் நடராஜருக்கென தனி சன்னிதியும் உள்ளது. கருவறையின் வெளிப்புற சுவர்களில் அமைந்துள்ள கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை உள்ளிட்ட தெய்வங்களின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. துர்க்கை சன்னிதிக்கு எதிரே சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது.திருச்சுற்றுப் பிரகாரத்தில் கமல விநாயகர் சன்னிதி உள்ளது.
அதன் அருகில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் ஆகிய சைவ சமய பெரியோர்களின் சன்னிதி அமைந்துள்ளது. இவர்களை வழிபட்ட பின்னர் அருகில் உள்ள பிரணவ கணபதி சன்னிதியையும் தரிசிக்கலாம். தொடர்ந்து காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்பாள், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், கால பைரவர் மற்றும் நவக்கிரக சன்னிதிகளும் அமைந்துள்ளன.இந்த தலத்தில் இறைவனையும், இறைவியையும் பக்தியுடன் வழிபட்டால் மனக்குறைகள் நீங்கி வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேகம், ஐப்பசி மாத அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள், கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தில் 108 சங்காபிஷேகம், மார்கழி மாதத்தில் அதிகாலை நேர சிறப்பு அபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளும் விமரிசையாக நடத்தப்படுகின்றன.மல்லிகேஸ்வரர் கோவில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள இந்த கோவில், பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளன.