மதுக்கடையை ஆய்வு செய்த சி.வி.சண்முகம்; ‘சாகும் வரை குடிப்போம்’ என முழங்கியவர்களால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நடுவனந்தல் புதூரில் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு கிராம மக்களில் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு தரப்பினர் கடையை மூடக்கோரி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் நேற்று நடுவனந்தல் கிராமத்துக்குச் சென்றார். அங்கு பொதுமக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், பின்னர் மதுக்கடையையும் ஆய்வு செய்தார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், கிராமங்கள் அதிகம் உள்ள நடுவனந்தல் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் ஏற்கனவே பேசியுள்ளதாக தெரிவித்தார். மேலும், மதுக்கடை திறப்புக்கு எதிராக கிராம சபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசின் நடவடிக்கைக்காக 5 நாட்கள் காத்திருப்பதாகவும், அதற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.இதற்கிடையே, மதுக்கடையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கடையின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சி.வி.சண்முகத்தின் ஆய்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, சிலர் “சாகும் வரை குடிப்போம்” என்று முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லச் செய்தனர். இந்த சம்பவத்தால் நடுவனந்தல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.