பழனி முருகன் கோவிலில் நாளை முதல் 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை ரத்து
அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மலை உச்சியில் அமைந்துள்ளது. அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல பக்தர்கள் பொதுவாக படிப்பாதை மற்றும் யானைப்பாதையை பயன்படுத்துகின்றனர். அதேபோல், ரோப் கார் மற்றும் மின்இழுவை ரெயில் சேவைகளும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக, ரோப் கார் மூலம் குறுகிய நேரத்தில் மலைக்கோவிலை அடைய முடிவதுடன், பயணத்தின் போது பழனி மலையின் இயற்கை எழிலையும் ரசிக்க முடிவதால் இந்த சேவைக்கு பக்தர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. சுற்றுலா அனுபவத்தையும் வழங்கும் இந்த சேவை பலரின் விருப்பத் தேர்வாக இருந்து வருகிறது.பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பழனி ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பணிகள் நடைபெறும் காலங்களில் ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.அந்த வகையில், வருடாந்திர பராமரிப்பு பணிகளை முன்னிட்டு பழனி முருகன் கோவிலின் ரோப் கார் சேவை நாளை முதல் 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்த காலகட்டத்தில் மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மின்இழுவை ரெயில் அல்லது படிப்பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.