திரிபுரா டிஜிபி அனுராக் தங்கர் மரணம்: அலுவலகத்தில் உயிரிழந்த நிலையில் மீட்பு; தீவிர விசாரணை
திரிபுரா மாநில காவல்துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) அனுராக் தங்கர், காவல்துறை தலைமையகத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அவரது உடல் மீட்கப்பட்டு அகர்தலா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.ஆரம்பகட்ட விசாரணையில், இது தற்கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பிரேத பரிசோதனை முடிவுகள் மற்றும் தடயவியல் ஆய்வு அறிக்கைகள் கிடைத்த பிறகே மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தையடுத்து காவல்துறை தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மூத்த அதிகாரிகள் தலைமையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா நேரில் டிஜிபி அலுவலகத்துக்கு சென்று சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் தகவல் கேட்டறிந்தார்.
1994-ஆம் ஆண்டு ஐபிஎஸ் கேடரைச் சேர்ந்த அனுராக் தங்கர், கடந்த ஆண்டு திரிபுரா மாநில டிஜிபியாக பொறுப்பேற்றார். இதற்கு முன்பு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது உயிரிழப்புக்கு குடும்பப் பிரச்சினையா அல்லது பணிச்சுமையா காரணம் என்ற கோணங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.