ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு: கல்வி மந்திரி லோகேஷ் பதவி விலக வேண்டும் - ரோஜா கோரிக்கை
ஆந்திரப் பிரதேசத்தில் 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நோக்கில் நடத்தப்பட்ட 'மெகா டி.எஸ்.சி.-2025' ஆசிரியர் தேர்வு கடந்த மே மாதத்தில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, சமூக அறிவியல் பாடத்தில் முதல் இடம் பிடித்த நவீன் என்ற ஒப்பந்த ஊழியர், வினாத்தாள் தயாரித்தல் மற்றும் ஆன்லைன் பதிவேற்றப் பணிகளில் ஈடுபட்டிருந்தது தெரியவந்ததால், வினாத்தாள் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
நீட் தேர்வில் வினாத்தாள் முறைகேடு தொடர்பாக டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அதேபோன்ற குற்றச்சாட்டு ஆந்திரப் பிரதேசத்திலும் அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகனும் மாநில கல்வித்துறை மந்திரியுமான நாரா லோகேஷ் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் தனது முழு ஆதரவை அறிவித்தது.திருப்பதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மந்திரியுமான நடிகை ரோஜா, ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி மந்திரி நாரா லோகேஷ் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.