திருப்பதியில் விமரிசையாக நடைபெற்ற பல்லவோற்சவம்
திருப்பதி திருமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்லவோற்சவ விழா இந்த ஆண்டும் பக்தி நிறைந்த சூழலில் சிறப்பாக நடைபெற்றது.திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெருமளவில் காணிக்கைகள் வழங்கிய மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பல்லவோற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது.சகஸ்ர தீபாலங்கார சேவை நிறைவடைந்த பிறகு, மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊர்வலமாக கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளினார். அங்கு மைசூர் அரச குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த மரியாதையை சுவாமி ஏற்றுக்கொண்டார்.தொடர்ந்து, கர்நாடக அரசு மற்றும் மைசூர் அரச குடும்பத்தின் பிரதிநிதிகள் உற்சவ மூர்த்திகளை வரவேற்று சிறப்பு ஆரத்தி செலுத்தினர்.
பின்னர் சிறப்பு பூஜைகள், நைவேத்தியம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. விழா நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி, வாரிய உறுப்பினர்கள் நரேஷ், தர்ஷன், பேஷ்கார் ராமகிருஷ்ணா மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.