காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஷர்மிளாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் குண்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் ஷர்மிளா தன்கர் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
40 வயதான ஷர்மிளா தன்கர், 9.81 மீட்டர் தூரம் குண்டை எறிந்து முதலிடம் பிடித்தார். கானாவைச் சேர்ந்த சினாபு இசா 8.65 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஷர்மிளாவின் இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மகளிர் குண்டு எறிதல் F57 பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றதுடன், இந்த சீசனின் சிறந்த தூரத்தையும் பதிவு செய்த ஷர்மிளாவுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும், ஷர்மிளாவின் இந்த சாதனை மூலம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பாரா தடகளத்தில் இந்தியா 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கப்பதக்கம் வென்றிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.எதிர்வரும் போட்டிகளிலும் ஷர்மிளா மேலும் பல வெற்றிகளைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது வாழ்த்து பதிவில் தெரிவித்துள்ளார்.