டெல்லியில் போராட்டம் தீவிரம்; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் தர்மேந்திர பிரதான்
நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு அரசியல் சூடு அதிகரித்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தை நோக்கி இன்று பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சி முன்கூட்டியே அறிவித்திருந்தது.நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியதை முன்னிட்டு, பேரணியை ஒட்டி டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நாடாளுமன்றம் சுற்றுவட்டாரத்தில் விரைவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று ஐந்து மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது.புதுடெல்லி பகுதியில் தடை உத்தரவு அமலில் இருப்பதாக காவல்துறை அறிவித்தது. முன் அனுமதி பெற்ற ஜந்தர் மந்தர் பகுதியைத் தவிர, மற்ற இடங்களில் போராட்டம், பேரணி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும், ஐந்து பேருக்கு மேல் ஒன்றுகூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பாகவே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நாடாளுமன்றப் பேரணிக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை அறிவித்திருந்தது.
மேலும், தடை உத்தரவை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில், போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறினர். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது, பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது தடியடி நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.நுழைய முயன்றவர்களை நோக்கி துணை ராணுவப் படையினர் துப்பாக்கிகளுடன் முன்னேறியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி செல்லக்கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயில்களும் மூடப்பட்டன. பின்னர், நாடாளுமன்றத்தின் நுழைவாயில்கள் மீண்டும் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த பரபரப்பான சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்னிட்டு தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.