டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை இன்று எதிர்கொள்ளும் இந்தியா... தொடரை கைப்பற்றுமா?
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஹராரேவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.இந்த நிலையில், இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று (சனிக்கிழமை) ஹராரேவில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 125 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா, அந்த இலக்கை வெறும் 13.2 ஓவர்களில் எட்டியது.இந்த வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்களான மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியது முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல், வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் அதிரடி அரைசதம் விளாசி அணியின் வெற்றியை எளிதாக்கினார்.புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரேயாஸ் அய்யருக்கு கிடைத்த முதல் வெற்றியும் இதுவே. அதே உற்சாகத்துடன் இன்றைய போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் களமிறங்குகிறது. முதல் போட்டியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் அதிரடி ஆட்டம் வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.மறுபுறம், சிகந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி, சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு அதிர்ச்சி அளித்திருந்தது.
ஆனால் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில், சொந்த மண்ணில் விளையாடியிருந்தும் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.முதல் போட்டிக்குப் பிறகு பேசிய சிகந்தர் ராசா, ஆடுகளத்தில் நீண்ட நேரம் நிலவிய ஈரப்பதம் போட்டியின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்திருந்தார். இதனால் இன்றைய ஆட்டத்திலும் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. டாஸில் வெற்றி பெறும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஜிம்பாப்வே அணி கடுமையாக போராடும் என்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச அணிகள்:
இந்தியா: அபிஷேக் ஷர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், அசோக் ஷர்மா.
ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், பென் கர்ரன், டியான் மையர்ஸ், சிகந்தர் ராசா (கேப்டன்), ரையான் பர்ல், வெஸ்லி மாதேவிர், மருமானி, பிராட் இவான்ஸ், நியூமன் நியாமுரி அல்லது வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் நரவா, முஜரபானி.இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியை யுனைட்8 ஸ்போர்ட்ஸ் சேனல் நேரலையில் ஒளிபரப்புகிறது.